திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சனிக்கிழமை தடுப்பூசி வராததால் தடுப்பூசி போடப்படாது என மருத்தவமனை அலுவலர்கள் தெரிவித்ததால் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் போதிய அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து திரும்பிச் செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை சமரசம் செய்து அனுப்பி வைக்கும் காவல்துறையினர்.
இந்நிலையில், நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எவ்வளவு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பட்டியல் வெளியிட்டு மக்கள் அதிக அளவு கூட்டம் கூடானல் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 200 நபர்களுக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் சனிக்கிழமை காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி வந்து சேராததால் சனிக்கிழமை செலுத்தமுடியாது என அரசு மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து மக்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தினமும் அலைக்கழிக்கப்படும் சூழலை தவிர்த்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு நேரத்துடன் கூடிய முன்னுரிமை டோக்கன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் முன் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.