முதல்வர் ஸ்டாலினை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி
முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் விவேகானந்தன் தாக்கல் செய்த மனுவில், கரோனோ இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுபடுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதோடு, சுற்றுப்பயணம் செய்கிறார்.
தமிழக முதல்வர் தனது உடல்நலனை கருத்தில் கொள்ளாமல், கடந்த மே 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் முழுக்கவச உடையணிந்து கரோனா வார்டில் ஆய்வு செய்தார். தமிழக மக்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை உள்ளது போல முதல்வரின் நலனில் அனைவருக்கும் அக்கறை உள்ளது.
எனவே முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை அபத்தாமாக உள்ளதாக கூறி மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
மனுதாரர் நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தொடர தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.