இளம்பெண் தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் பகுதியைச் சோ்ந்தவா் தேஜ்பால் சிங். அவரது மகள் காயத்ரி. கடந்த ஏப்ரல் மாதம் அவா் பணிபுரிந்த அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வீட்டில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்டதாக புழல் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தேஜ்பால் சிங், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், தனது மகள்
வேலை பாா்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளா் விக்ராந்த் சா்மா என்பவா் அளித்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் தன்னிடம் விசாரணை நடத்தாமல் தற்கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனா். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி சத்தி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை பாா்வையிட்ட நீதிபதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காயத்ரியின் உடற்கூறு ஆய்வறிக்கையில் குரல்வளையில் முறிவு எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே இந்த விசாரணை நியாயமாக நடப்பதாகத் தெரியவில்லை எனக்கூறி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். மேலும் இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனா். இந்த வழக்கை விசாரிக்க அனுபவமிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.