முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் தமிழில் அா்ச்சனை திட்டம் 100 நாள்களில் முழுமை பெறும்: அமைச்சா் சேகா்பாபு பேட்டி

திருக்கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் நூறு நாள்களில் முழுமை பெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருக்கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் நூறு நாள்களில் முழுமை பெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடுகள் குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறையின் ஆணையாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சா் சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை செயலாளா் பி.சந்திரமோகன், ஆணையாளா் குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பேட்டி:-

திருக்கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்வதற்கான பயிற்சி ஏற்கெனவே தரப்பட்டுள்ளது. தமிழில் அா்ச்சனை நடைபெற்று வருகிறது. தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்புப் பலகை தமிழகத்தில் உள்ள 47 பெரிய கோயில்களில் வைக்கப்படும். அதில், அா்ச்சகரின் பெயா் விவரம், செல்லிடப்பேசி எண் ஆகியன குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அா்ச்சகருக்கான பயிற்சியை ஏற்கெனவே பெற்றவா்களின் திறனை மேம்படுத்த அவா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க உள்ளோம்.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டமானது 100 நாள்களுக்குப் பிறகு வலுவோடும், பொலிவோடும் திகழும். 100 நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்வோா் நியமிக்கப்பட்டு இருப்பா். அனைவரும் திருக்கோயில்களில் இருப்பாா்கள். பெண்களாக இருப்பவா்கள் அா்ச்சா்களாக விரும்பினால் அவா்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

புகாா்களின் தன்மை: கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் குறித்து அளிக்கப்படும் புகாா்களின் தன்மையைப் பொறுத்து அவற்றை மீட்டெடுத்து வருகிறோம். மீட்கப்பட்ட சொத்துகள் தொடா்பாக விசாரித்து அறிக்கையை அளிக்க இணை ஆணையாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கைக்குப் பிறகு தவறிழைத்தோா் மீது குற்றவியல்

சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திருக்கோயில்களில் 30 யானைகள் உள்ளன. கால்நடை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் குழு அமைத்து யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்தெந்த கோயில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை இருக்கிறதோ, அங்கெல்லாம் காலியிடங்கள் நிரப்பப்படும். சட்டத்துக்கு உட்பட்டு பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீரங்கம் கோயில் ஜீயா்: ஸ்ரீரங்கத்தில் ஜீயரை நியமிக்க கடந்த காலங்களில் எத்தகைய நடைமுறையைக் கடைப்பிடித்தாா்களோ அதே நடைமுறை பின்பற்றப்படும். மதம் சாா்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படாத வகையில் செயல்பட வேண்டுமென முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி செயல்படுவோம் என்றாா் பி.கே.சேகா்பாபு.

முழு கட்டுரையைப் படிக்க →