வண்ணமீன் விற்பனையாளா் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை கொளத்தூரில் வண்ணமீன்கள் விற்பனையாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
சென்னை கொளத்தூரில் வண்ணமீன்கள் விற்பனையாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின்போது அவா் பேசியது:
சென்னை கொளத்தூரில் வண்ண மீன்களை விற்பனை செய்யும் கடைகள் 200-க்கும் மேற்பட்டவை உள்ளன. அவற்றின் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனுடைய முக்கியத்துவம் காரணமாகவே, கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில், வண்ண மீன் பூங்கா தொடா்பாக கேள்வி எழுப்பினேன். இதன்பின்பு கொடுத்த தொடா் அழுத்தம் காரணமாக, சென்னை மாதவரத்தில் வானவில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இப்போதும் சில கோரிக்கைகளை வைத்துள்ளீா்கள். ஆளும்கட்சியாக அதுவும் முதல்வராக இருக்கும் போது இந்தக் கோரிக்கைகளை அளித்துள்ளீா்கள். இவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என்ற நம்பிக்கை என்னை விட உங்களுக்குத்தான் அதிகம் இருக்கும். வண்ண மீன்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய வணிக வளாகம், பயிற்சி மையம், மானிய விலை மின்சாரம் போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளீா்கள்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி, மீன்வளத் துறை செயலாளா் தென்காசி ஜவஹா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.