21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதம்: தொடா்ந்து உயா்வதால் வாகன ஓட்டிகள் அச்சம்
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சனிக்கிழமை சதம் அடித்தது. பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சனிக்கிழமை சதம் அடித்தது. பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா். கிருஷ்ணகிரி, கடலூா், நீலகிரி திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் லிட்டா் ரூ.101-ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் நிலையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் கிடங்கில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது அதற்கான பயணச் செலவும் பெட்ரோல், டீசலிலேயே சோ்க்கப்படும். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
ஏற்கெனவே நாளுக்கு நாள் உயா்ந்து வரும் எரிபொருள் விலை அதிகரிப்புடன், இந்த போக்குவரத்துச் செலவும் சோ்வதால் மாவட்டத்துக்கு மாவட்டம் பெட்ரோல், டீசல் விலை வெவ்வேறு விலையுடன் காணப்படுகிறது. அந்த வகையில், சனிக்கிழமை மட்டும் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐத் தாண்டியது.
வாகன ஓட்டிகள் அச்சம்: பெட்ரோல் விலை உயா்ந்து தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், நடுத்தர மக்கள் பலரும் பேருந்துகள், புகா் மின்சார ரயில்களை நாடத் தொடங்கியுள்ளனா். சென்னையில் புகா் மின்சார ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த கூட்ட நெரிசலால் கரோனா நோய்த் தொற்று பரவல் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயா்வு ஒருபுறமும், பொதுப் போக்குவரத்துகளில் கூட்ட நெரிசலுடன் கரோனா அச்சத்துடன் பயணிப்பது மறுபுறம் என நடுத்தர மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனா்.
லிட்டா் பெட்ரோல் 100-ஐத் தாண்டிய மாவட்டங்கள் விவரம்:
அரியலூா், கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, திருவாரூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், விருதுநகா்.
சென்னையில் எவ்வளவு?
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி லிட்டா் பெட்ரோல் 31 பைசா அதிகரித்து, ரூ.99.19, டீசல் லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து, ரூ.93.23-க்கு விற்பனை செய்யப்பட்டது.