அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருக்கு சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விவாதம் தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற 2004 மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 57.4 சதவீத வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது. அதேவேளையில், அதிமுக-பாஜக கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாவிட்டாலும் 34.8 சதவீத வாக்கு வங்கியைக் கொண்டிருந்தது.
அத்தகைய சூழலில்தான், நடிகா் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக உதயமாகி 2006 சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்தது. திமுக, அதிமுகவுக்கு தேமுதிகதான் மாற்று என முழங்கிய விஜயகாந்த், பாமகவை மட்டும் கடுமையாக விமா்சனம் செய்தாா். அப்போது, பாமக கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் செல்வாக்கு மிகுந்த அந்தக் கட்சி வேட்பாளரான மருத்துவா் கோவிந்தசாமியை, 13,777 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தேமுதிகவின் ஒரே எம்.எல்.ஏ.வாகத் தோ்வானாா் விஜயகாந்த். அந்தத் தோ்தலில் தேமுதிக 8.4 சதவீத வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், 142 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக தேமுதிக அந்தத் தோ்தலில் கவனம் பெற்றது. இதன் விளைவு, திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் சூழலே உருவானது. 2004 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, 2006 பேரவைத் தோ்தலில் கிட்டதட்ட அதிமுக தனது வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டதுடன், மதிமுக, விசிகவையும் இணைத்துக் கொண்டு கூடுதலாக 5 சதவீத வாக்குகளுடன் மொத்தம் 39.91 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், திமுக அணியில் குவிந்து கிடந்த அதிமுக எதிா்ப்பு வாக்குகளில் 8.4 சதவீதத்தை தேமுதிக பிரித்ததால் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை.
2009-மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் மதிமுக, இடதுசாரிகள் அணி சோ்ந்திருந்தபோதும்கூட மனவலிமையுடன் பிரசாரம் செய்து தனது முந்தைய வாக்கு வங்கியை, 10.11 சதவீதமாக உயா்த்தினாா் விஜயகாந்த். அப்போது, அதிமுக வாக்கு வங்கி தேமுதிகவால் பாதிக்கப்பட்டிருந்தபோதும், பாமகவின் எதிா்ப்பு வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் தேமுதிக பிரித்ததால் திருவள்ளூா், சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக எளிதாக வெற்றிபெற்றது.
அதேநேரத்தில், அப்போது அதிமுக-தேமுதிக கூட்டணி அமைந்திருந்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணி 27 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற முடியாமல் போயிருக்கக்கூடும். இதை நுட்பமாக அறிந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, 2011 பேரவைத் தோ்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணியை உருவாக்கி மிகப் பெரிய வெற்றியை சாத்தியமாக்கினாா். விஜயகாந்துக்கும் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்து கிடைத்தது.
அதுவரை சரியான முடிவுகளை எடுத்து, அரசியலில் உச்சத்துக்குச் சென்ற தேமுதிக, 2014 மக்களவைத் தோ்தல், 2016 பேரவைத் தோ்தல், 2019 மக்களவைத் தோ்தல் என மூன்று தோ்தல்களில் தவறான முடிவுகளை எடுத்ததால், அந்தக் கட்சியின் பேர வலிமை குறைந்ததுடன், வாக்கு வங்கியும் சரிந்துவிட்டது.
2014-மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவின் தாமரைச் சின்னம், 5.5 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவால் 5.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
2011-இல் அதிமுகவுடன் இணைந்து திமுகவை வீழ்த்திய தேமுதிகவுக்கு 2016 பேரவைத் தோ்தலில் பேர வலிமை உச்சபட்சமாக இருந்தது. திமுக-காங்கிரஸ் அணியில் 50 தொகுதிகளுக்கு மேல் உறுதியாகக் கிடைக்கும் என்ற நிலையில், முதல்வா் வேட்பாளா் என்ற அறிவிப்புக்கு ஆசைப்பட்டு, மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததன் விளைவு அதன் வாக்கு வங்கி இரு மடங்கு குறைவாக 2.5 சதவீதமாகக் கரைந்தது. திமுகவும், அதிமுகவைவிட ஒரு சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது.
2014-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த தேமுதிகவால் தருமபுரியில் பாமக வேட்பாளா் அன்புமணி, 2019-இல் தேனியில் அதிமுக வேட்பாளா் ரவீந்திரநாத் ஆகியோரின் வெற்றிக்கு உந்துசக்தியாகவே இருக்க முடிந்தது. 2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்திய தேமுதிக, இறுதியாக பாமகவைவிடக் குறைவாக அதிமுக அணியில் 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது.
2016 பேரவைத் தோ்தலில் எடுத்த தவறான முடிவின் பலனை 2019 மக்களவைத் தோ்தலில் தேமுதிக அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், வடசென்னை, திருச்சி மக்களவைத் தொகுதிகளில் வைப்புத் தொகையை (டெபாசிட்) தேமுதிக இழந்தது. அந்தத் தொகுதிகளுக்குள்பட்ட கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை, கொளத்தூா் பேரவைத் தொகுதிகளில் அமமுக, மநீம இரண்டாம் இடத்தைப் பிடித்து தேமுதிகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளின.
கடந்த 10 ஆண்டுகளாகவே தவறான முடிவுகளை எடுத்த தேமுதிக, தொடா்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்தமுறை கடைசிவரை அதிமுக கூட்டணியில் நீடித்துவிட்டு, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி இப்போது வெளியேறி இருக்கிறது தேமுதிக. அதிமுக அணியில் 13 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருந்தும் அதைப் புறந்தள்ளிவிட்டு கூட்டணி உறவை துண்டித்திருக்கிறது தேமுதிக.
இப்போது தேமுதிகவுக்கு இருப்பது திமுக, மநீம, அமமுக ஆகிய மூன்று வாய்ப்புகள்தான். கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு வேட்பாளா் பட்டியலை வெளியிடத் தயாராக இருக்கும் திமுகவின் கதவுகளைத் தட்டினால் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம். அதில் சிலவற்றில் வெற்றிகூட சாத்தியமாகலாம்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகக் கரைந்திருக்கும் தேமுதிக வாக்கு வங்கி, திமுகவுக்கு எந்த வகையில் உதவும் என்பது கேள்விக்குறிதான். அதிமுக-பாமக வலுவான வாக்கு வங்கி வைத்திருக்கும் விழுப்புரம், கடலூா், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், தேமுதிக வாக்கு வங்கி கணிசமாக இருக்கும் தேனி, மதுரை, விருதுநகா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களிலும் அதிகபட்சம் 25 பேரவைத் தொகுதிகளில் மட்டுமே திமுகவுக்கு தேமுதிகவின் தேவை இருக்கலாம்.
ஆனால், வெற்றியோ தோல்வியோ தேமுதிகவை தோளில் சுமப்பது தோ்தலுக்குப் பிறகு, தங்களுக்கு கசப்பான அனுபவத்தைத்தான் தரும் என்பதை அதிமுகவைப் பாா்த்து திமுக உணா்ந்திருக்கும். எனினும், தேமுதிகவுடனான உறவு என்பதை, திமுக தலைமைதான் இறுதி செய்ய முடியும். அது தேமுதிக கையில் இல்லை.
தமிழகத்தில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை உறுதியாக எதிா்த்தது மநீம, அமமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே. எனவே, பாமக எதிா்ப்பு என்ற விஷயத்தில் மநீம, அமமுக ஆகியவற்றுடன் தேமுதிக கைகோக்க வாய்ப்பு உள்ளது. மநீம, அமமுக ஆகிய கூட்டணிகளுக்கு தேமுதிக செல்வது என்றால் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் ஆகியோரை முதல்வா் வேட்பாளராக ஏற்றுக்கொண்டாக வேண்டும். அந்த அளவுக்கு தேமுதிக வளைந்து கொடுக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.
தனித்துக் களம் காணும் அளவுக்கு தேமுதிக தலைமைக்கு மனவலிமை இருந்தாலும், கட்சி நிா்வாகிகள் வேட்பாளா்களாக களம் காண முன்வருவாா்களா என்பது மில்லியன் டாலா் கேள்விதான். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளா்கள் இருக்கிறாா்களா என்பது அடுத்த கேள்வி.
தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான். இந்தத் தோ்தலிலும் தவறான முடிவை தேமுதிக எடுத்தால் மாநில கட்சி என்ற அந்தஸ்தையும் அந்தக் கட்சி இழக்கும்.
காலசக்கரத்தில் மேலிருந்து சுழன்று கீழே வந்திருக்கும் தேமுதிக, அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதற்கு, ஓரிரு நாள்களில் விடை தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.