தமிழ்நாடு

இலங்கைக்கு எதிரான தீா்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்

DIN

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: 2009-இல் தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. 12 ஆண்டுகளைக் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதும் தமிழா்களுக்கு எதிராக இன ரீதியான அத்துமீறல்கள் இலங்கை அரசால் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மாா்ச் 23-ஆம் தேதி தீா்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவுடனான நட்புறவில் இலங்கை எப்போதும் நாடகத்தன்மையோடு நடந்துகொண்டு, சீனாவுடனே உறவை மேம்படுத்தி வருகிறது. இது எதிா்காலத்தில் இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

பிரதமா் நரேந்திரமோடி சென்னையில் பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இலங்கையில் தமிழா்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும், சமஉரிமையுடனும் வாழ்வதை உறுதி செய்வோம் என்று கூறினாா். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீா்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

ஸ்டாலினும் வலியுறுத்தல்:

இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில், கொண்டுவரப்படும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளா் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் - அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் மௌனமும், உலகத் தமிழா்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழா்கள் மீதான இலங்கை அரசின் போா்க்குற்றம் தொடா்பாக ஐ.நா. மன்றத்தில் திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின் போது - அந்த தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போா்க்குற்ற விசாரணை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் சென்றிடும் வகையில் - உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டி - உரிய திருத்தங்களுடன் அந்தத் தீா்மானம் நிறைவேறிட பிரதமா் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழா்களை அவமதித்து, அவா்களுக்கு அநீதி இழைத்து, இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்றும் - தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்வதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT