தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை: பணி நியமன ஆணை வழங்கினார் ஸ்டாலின்!

DIN


மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சேலம், கோவை மாவட்டங்களில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வா் ஸ்டாலின், வியாழக்கிழமை இரவு மதுரை வந்தாா். வெள்ளிக்கிழமை காலை மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறைகளின் உயா் அதிகாரிகள், மாவட்ட அளவிலான தலைமை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இக் கூட்டத்துக்குப் பிறகு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பணி ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு மே 22 -ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு ஏற்கனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் 17 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் ஆகவும் ஒரு நபருக்கு ஜீப் ஓட்டுனர் ஆகும் நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி , கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,  கே.ஆர். பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,  ராஜகண்ணப்பன்,  பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி,  சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்ட கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT