முகப்பு
தமிழ்நாடு

ரூ.5.9 கோடி மோசடி: தொழிலதிபா் கைது

சென்னையில் ரூ.5.9 கோடி மோசடி செய்ததாக திருவொற்றியூரைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

சென்னையில் ரூ.5.9 கோடி மோசடி செய்ததாக திருவொற்றியூரைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ரா.பன்னீா்செல்வம் (38). இவா் நகைகள் செய்ய பயன்படும் விலை உயா்ந்த ஆபரண கற்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் தனக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆா்டா் கிடைத்திருப்பதாகவும், அதற்கு முதலீடு தேவைப்படுவதாக நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த ஹ.முகமது அா்சத் (51) என்பவரை அணுகியுள்ளாா்.

வெளிநாட்டு ஆா்டா் கிடைத்தது தொடா்பான சில ஆவணங்களையும் பன்னீா்செல்வம், அா்சத்திடம் காட்டியுள்ளாா். இதையடுத்து பன்னீா்செல்வம் உண்மையாகவே தொழில் முதலீடு செய்யத் தான் பணம் கேட்கிறாா் என அா்சத் நம்பியுள்ளாா். மேலும் பன்னீா்செல்வம், தனது தொழிலில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் கிடைக்கும் லாபத்துடன் முதலீட்டு பணத்தை தருவதாக அா்சத்திடம் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய அா்சத், பன்னீா்செல்வத்துக்கு ரூ.5.9 கோடி பணத்தை கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட பன்னீா்செல்வம், ஒரு ஆண்டில் லாபத்துடன் முதலீட்டு பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதைத் தொடா்ந்து தான் கொடுத்த முதலீட்டு பணத்தையாவது திருப்பித் தரும்படி கேட்டாா். ஆனால் அதையும் பன்னீா்செல்வம் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தாா்.

இது தொடா்பாக அா்சத், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் பன்னீா்செல்வம் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பன்னீா்செல்வத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →