தமிழ்நாடு

சுங்கச்சாவடியை அகற்றக் கோரி கயத்தாரில் அனைத்துக் கட்சி, வியாபாரிகள் மறியல் போராட்டம்; 49 பேர் கைது

DIN

கோவில்பட்டி: கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று காலை அனைத்துக் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரை - திருநெல்வேலி தேசிய நான்கு வழிச்சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூர் பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களது வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் பாஸ்டாக் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கயத்தாறு சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டணம் வசூலிக்கப்படுவதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கூறி வந்தனர். ஆனாலும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதையடுத்து கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்றுவதற்காக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை கயத்தாறு சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், அதுவரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்தும் சுங்கச்சாவடியை கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் கடந்து செல்லும் போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை கயத்தாறு ஊருக்குள் அனைத்து டிப்பர் லாரிகள் மற்றும் பயணிகள் வேன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. ஒருங்கிணைப்புக் குழுவினர் தலைமையில் வியாபாரிகள் மற்றும் அனைத்துக்  கட்சியினர் கயத்தாறு ஊரில் இருந்து சுங்கச்சாவடியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

சுமார் 50 மீட்டர் தூரம் வந்த நிலையில் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் தங்கள் ஊர்வலத்துக்கு வழி விடும்படி ஒருங்கிணைப்புக் குழுவினரும், அனைத்து கட்சியினரும் போலீஸாரிடம் முறையிட்டனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுக்கவே அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து ஏடிஎஸ்பி கோபி தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துக் கட்சியினர் மற்றும் வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் 9 பெண்கள் உள்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தையொட்டி சுங்கச்சாவடி முதல் பேரூராட்சி எல்கை முடிவுவரை நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT