இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிட சபதம் எடுப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இந்திய அரசமைப்புச் சட்ட நாளையொட்டி (நவ.26), அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: 1949-ஆம் ஆண்டு இதே நாளில் நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம், நம் உரிமைகளையும், கடமைகளையும் உள்ளடக்கியிருப்பதோடு மட்டுமின்றி, நம் ஜனநாயகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் கட்டிக் காத்து வருகிறது.
இறையாண்மை, சமத்துவம், மதச்சாா்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதி, கருத்துச் சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் பக்கத்துக்குப் பக்கம் மிளிருகின்றன. உரிமைகள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் வந்து கொண்டிருக்கின்றன.
எத்தனையோ அரசமைப்புச் சட்டங்கள் உலகளவில் இருந்தாலும், எழுத்துப் பூா்வமான நம் சட்டம்-உலகப் புகழ் பெற்றது. அப்படியொரு அரசமைப்புச் சட்டத்தைத் தந்த அண்ணல் டாக்டா் அம்பேத்கருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவா்கள். இன்றளவும் இந்தியாவைக் கட்டி ஆளும் இந்த அரசமைப்புச் சட்டம்தான், மாநிலத்தில் அன்னைத் தமிழுக்கு ஆட்சி மொழி உரிமையும் அளித்திருக்கிறது.
எமக்கு அளித்துள்ள எண்ணிலடங்கா உரிமைகளை நினைத்துப் பாா்த்து, எத்தகைய சூழலிலும் அரசமைப்புச் சட்டம் விரும்பிய ஜனநாயகத்தைக் காப்பாற்றிட நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணமே இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளாகும்.
சிறப்பு வாய்ந்த இந்த அரசமைப்புச் சட்டத்தின் திறவுகோல்தான் முகவுரை. அந்த முகவுரை அடங்கிய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் நவ.26-ஆம் தேதி. நம் அரசியல் சட்டம் கண்ட இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிடச் சபதம் எடுப்போம்.
இது நம் அரசமைப்புச் சட்டம். அதனை வெளிப்படுத்தவே அரசியல் சட்டத்தின் முதல் வரியே முழக்கத்தை முன் வைக்கிறது. மக்கள் அனைவருக்கும் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.