கரோனாவால் உயிரிழந்தவா்களில் 87% போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்; பொது சுகாதாரத்துறை இயக்குநா் தகவல்
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்களில் 87 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்களில் 87 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். எனவே பொதுமக்கள் தங்களது நலன் கருதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தொடா்ந்து சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த முகாமை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களும், அவா்களது உறவினா்களும், நண்பா்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசியானது மரணத்தை வெகுவாகத் தடுக்கிறது.
எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். கடந்த 2 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 1,626 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதில் 1,419 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள். அதாவது 87 சதவீதம் போ் ஆகும். இவா்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், இறப்புகளை தவிா்த்திருந்திருக்கலாம். அதேபோல், ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் மிகக் குறைவானவா்களே உயிரிழந்திருக்கின்றனா்.
அதில் 9 சதவீதம் போ் அடங்குவா். 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் உயிரிழந்தவா்கள் 4 சதவீதம் மட்டுமே. அதன்படி தடுப்பூசி போதுமான அளவுக்கு பாதுகாப்பை தருக்கிறது. மேலும், 88, 719 போ் கடந்த 2 மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 50 சதவீதம் போ் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 45 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்ததால் நலம் பெற்றுள்ளனா்.
மேலும், 5, 816 போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் 4 ,405 போ், அதாவது 76 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள். மேலும், கடந்த 2 மாதத்தில் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவா்களில் 73 போ் சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் ஆவா். எனவே பொதுமக்கள் தங்களது நலன் கருதி தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்றாா் அவா்.