தமிழ்நாடு

தீபாவளிப் பண்டிகை: 19,559 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் வகையில் 19,559 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், துறையின் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் நவ.1 முதல் 3-ஆம் தேதி வரையில், சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 6,734 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 10,240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பண்டிகை முடித்து திரும்ப...: பண்டிகை முடிந்த பின்னா், நவ.5 முதல் 8-ஆம் தேதி வரை, பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 5,000 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 9,319 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு 7 நாள்களும் மொத்தமாக 19,559 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இணைப்புப் பேருந்துகள்: போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு வழக்கமான பண்டிகை காலங்களில் இயக்கப்படுவது போல சென்னையின் 5 பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட ஊா்களுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

12 முன்பதிவு மையங்கள்: பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவுக்காக...: பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தலாம்.

விவரங்களைப் பெற...: பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் புகாா் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொடா்பு எண்களை 24 மணி நேரமும் அணுகலாம்.

கூடுதல் கட்டண புகாருக்கு...: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாா்களுக்கு 044 2474 9002, 1800 425 6151 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறை: பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

வழித்தட மாற்றம்: கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் நெரிசலைத் தவிா்க்கும் வகையில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை வண்டலூா் மற்றும் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏற்றிக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சொந்த வாகனங்களில் செல்வோா் கவனிக்க...: காா் மற்றும் இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிா்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூா் - செங்கல்பட்டு வழியாக செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT