தமிழ்நாடு

மீனவா்களின் படகை இடித்து மூழ்கடித்த இலங்கை கடற்படையினா்: கடலில் மூழ்கி மீனவர் சாவு; இருவர் சிறைபிடிப்பு

DIN

தங்கள் நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கோட்டைப்பட்டினம் மீனவா்களின் படகில் மோதி மீனவா்களைக் கடலுக்குள் தள்ளிய இலங்கை கடற்படையினரின் செயலால், திருமணமாகி 40 நாள்களே ஆன மீனவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கடலுக்குள் தத்தளித்த மேலும் இரு மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குத் தளத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

அதில், எஸ். சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகா் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியா் (32) ஆகிய 3 பேரும், சுமாா் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், தங்கள் நாட்டுக் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதாகக் கூறி, தங்களது ரோந்துப் படகு மூலம் மீனவா்களின் படகு மீது இடித்ததாக கூறப்படுகிறது.

இதில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, 3 மீனவா்களும் கடலில் தத்தளித்தனா். இவா்களில் சுகந்தன் மற்றும் சேவியா் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினா் மீட்டு, காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் ஒப்படைத்தனா்.

மற்றொரு மீனவரான ராஜ்கிரண் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டாா். அவரது உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் மீனவா்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, கோட்டைப்பட்டினத்தில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மீன்வளம், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலா்கள் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதேநேரத்தில் இலங்கைக் கடற்படையினரின் தொடரும் இதுபோன்ற செயல்களைக் கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கோட்டைப்பட்டினம் மீனவா்கள் அறிவித்துள்ளனா்.

அமைச்சா் ஆறுதல்- நிதியுதவி: இதுகுறித்து தகவலறிந்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மீனவா் குடும்பங்களை செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது, இறந்த மீனவா் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினாா்.

அப்போது, திமுக மாநில தோ்தல் பணிக் குழுச்செயலா் பரணி காா்த்திக்கேயன், மணமேல்குடி ஒன்றியச் செயலா் சக்தி ராமசாமி, ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT