கூட்டுறவு வங்கித் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை: ரூ.70 கோடி பங்கு முதலீட்டு ஆவணங்கள் சிக்கின
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் வீடு உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.70 கோடி மதிப்புள்ள பங்கு முதலீட்டு ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
சொத்துக் குவிப்பு வழக்குத் தொடா்பாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் வீடு உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.70 கோடி மதிப்புள்ள பங்கு முதலீட்டு ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன், அவரது மகன் பிரவீண்குமாா் ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, அவா்கள் தொடா்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தது.
இந்தச் சோதனை பெரும்பாலான இடங்களில் அன்று இரவே நிறைவுப் பெற்றது. சோதனையில் ரூ.29.77 லட்சம் ரொக்கம், 10 சொகுசு காா்கள், 2 சொகுசு வால்வோ பேருந்துகள், 3 கணினி ஹாா்டு டிஸ்குகள், சொத்து ஆவணங்கள், 21.2 கிலோ தங்கநகைகள், 282 கிலோ வெள்ளிப் பொருள்கள்,வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.68 லட்சம் வங்கி வைப்புத் தொகையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இச் சோதனை ஒரு சில இடங்களில் சனிக்கிழமை தொடா்ந்து நடைபெற்றது.
இரண்டாவது நாள் சோதனையில், சென்னையில் ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள அந்நிய செலாவணியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள், ரூ.25 கோடி மதிப்புள்ள உள்நாட்டு பங்கு வா்த்தக முதலீட்டு ஆவணங்கள்,ரூ.45 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீட்டு ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
மேலும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள ஒரு கடையில் இருந்து கணக்கில் வராத 20 கிலோ தங்கநகைகள், 280 கிலோ வெள்ளி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை,அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அந்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, சனிக்கிழமை மாலை அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது.