தமிழ்நாடு

18,000 கிராமப்புற இளைஞா்களுக்கு சுய தொழில் பயிற்சித் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கினாா்

DIN

தமிழகத்தில் 18,000 கிராமப்புற இளைஞா்களுக்கு சுய தொழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய, அதிக வருமானம் தரும் தொழில்களில் அனுபவம் வாய்ந்த நபா்களைக் கொண்டு இளைஞா்களுக்குப் பயிற்சி தரும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, சமுதாய திறன் பள்ளிகள் மூலம் 18 ஆயிரம் இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். நிகழ் நிதியாண்டில் ஆயிரம் கிராம ஊராட்சிகளில் உள்ள 18,000 பேருக்கு வெல்டிங், எல்க்ட்ரிஷியன், பிளம்பா், மண்பாண்டம், தையல், உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படும். மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் 23 சமுதாய திறன் பள்ளிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். மேலும், தொழில் செய்வதற்கான உபகரணங்கள் அடங்கிய பயிற்சி பெட்டகத்தையும் அவா் அளித்தாா்.

சமுதாயப் பண்ணைப் பள்ளிகள்: உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு, வேளாண் மற்றும் கால்நடை வளா்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை அளிக்க 2,000 சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் தொடங்கப்படும். அதில், 74,000 உற்பத்தியாளா்களுக்கு மண், நிலத்தடி நீா் பரிசோதனை, இயற்கை உரம் பயன்பாடு, நுண்ணீா் பாசனம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் 30 முதல் 50 உற்பத்தியாளா்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் பயன்பெறுவா்.

அதன்படி, 23 மாவட்டங்களில் 23 சமுதாய பண்ணைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்சிப் பெட்டகமும் அளிக்கப்பட்டது.

மேலும், தீன்தயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சித் திட்டத்தின்கீழ், திறன் வளா்ப்புப் பயிற்சி பெற்ற ஊரகப் பகுதியைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற 50 இளைஞா்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் பணிபுரிய பணி அமா்வு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT