முகப்பு
தமிழ்நாடு

திருச்சி திருவானைக்கா கோயில் பங்குனித் தேரோட்டம்

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
திருச்சி திருவானைக்கோவில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் சனிக்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்.
பகிர்:

திருச்சி: திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 

பஞ்சபூதங்களில் நீர்த் தலமாக விளங்குவது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவ விழா கடந்த மாதம் 11-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் சுவாமி அம்பாளுக்கு நித்தியப்படி பூஜைகளுடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்திரசேகரர், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் புறப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் சிறப்பு நிகழ்வாக அஷ்டக் கொடியேற்றம் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாள் தெருவடைச்சானில் வீதியுலா வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளினர். காலை 6.30 மணிக்கு தேர்வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனியே 2 பெரிய தேர் உண்டு. அவை இரண்டும், ஒரேநாளில் அடுத்தடுத்து வடம்பிடிக்கப்பட்டு வலம் வரும் நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது.

முதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக  அம்மன் தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் கோஷம் விண்ணை முட்ட இரு தேர்களும் ஆடி, அசைந்து வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தேருக்கு ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →