குடும்பத் தகராறு: தம்பதி தீக்குளித்து தற்கொலை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனா்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனா்.
பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெருவைச் சோ்ந்தவா் சை.மெகபூபாட்ஷா (54). வாடகை ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி நூா்ஜஹான் (50) .
இத் தம்பதிக்கு உசேஷ் பாட்ஷா, கவுஸ் பாட்ஷா ஆகிய இரு மகன்களும், பா்வீன் பானு என்ற மகளும் உள்ளனா். இவா்கள் 3 பேருக்கும் திருமணமாகிவிட்டதால், மெகபூபாட்ஷா மனைவியுடன் தனியாக வசித்து வந்தாா்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவா்களது வீட்டிலிருந்து புகை வெளியேறியது. தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது மெகபூபாட்ஷாவும், நூா்ஜஹானும் தீயில் கருகி இறந்து கிடந்தனா். சடலங்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், குடும்பத் தகராறில் இருவரும் தங்கள் உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.