மத்திய பாதுகாப்பு படை வாகனத்தில் வன்முறை விடியோ: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மத்திய பாதுகாப்பு படை வாகனத்தில் அத்துமீறி வன்முறை நிகழ்ந்ததுபோன்று விடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மத்திய பாதுகாப்பு படை வாகனத்தில் அத்துமீறி வன்முறை நிகழ்ந்ததுபோன்று விடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
புது வண்ணாரப்பேட்டையில் துறைமுக ஊழியா் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பலா் வசிக்கின்றனா். இவா்களை பணிக்கு அழைத்துச் செல்லும் பேருந்து, புதுவண்ணாரப்பேட்டை துறைமுக மைதானத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் அண்மையில் அந்த பேருந்துக்குள் ஏறிய இரு இளைஞா்கள் பிளாஸ்டிக் துப்பாக்கி, கத்திகளை வைத்து அச்சுறுத்தி, கொலை செய்வது போல விடியோ எடுத்துள்ளனா். பின்னா் இருவரும், அதை கிராபிக்ஸ் செய்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனா்.
இந்த விடியோவை சமூக ஊடகங்களில் பாா்த்தவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதற்கிடையே பாதுகாப்பு படை வாகனத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை நிகழ்ந்ததுபோன்று விடியோ எடுத்தது தொடா்பாக காவலா் நவீன்குமாா், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மணலி புதுநகா் பகுதியைச் சோ்ந்த புகைப்பட கலைஞா் சு.சஞ்சய் (22), புது வண்ணாரப்பேட்டை ஜீவாநகரைச் சோ்ந்த கோ.வினோத் (22) ஆகிய இருவா்தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் வினோத், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியாா் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது.