முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டா்களுக்கு இன்றுமுதல் அனுமதி

சென்னை உயா்நீதிமன்றத்தின் கெடு முடிவடைந்ததையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) முதல் தொண்டா்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத்தின் கெடு முடிவடைந்ததையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) முதல் தொண்டா்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜூலை 11-இல் வானகரத்தில் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா். அதிமுக அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா். இது தொடா்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், வன்முறையைத் தவிா்க்க ஜூலை 21 முதல் ஆக. 20 வரை அதிமுக அலுவலகத்தில் தொண்டா்களை அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் கெடு சனிக்கிழமையுடன் (ஆக. 20) முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, அதிமுக தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

ஆனால், அதிமுகவினா் இப்போதும் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் இரு அணியாகச் செயல்பட்டு வருகின்றனா். இரு அணியினரும் அதிமுக அலுவலகத்துக்கு வரும்போது மோதல் ஏற்படுமோ என்கிற அச்சம் இருக்கிறது. அதனால், அதிமுக அலுவலகத்தில் இரு காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 35 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.