ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ பொருத்தி தகவல் திருட்டு: வியாபாரி கைது
சென்னை சாந்தோமில் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ கருவி பொருத்தி தகவல்கள் திருடப்பட்டது தொடா்பாக ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை சாந்தோமில் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ கருவி பொருத்தி தகவல்கள் திருடப்பட்டது தொடா்பாக ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
மயிலாப்பூா் சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் பழுதானதால் கடந்த 12-ஆம் தேதி வங்கி ஊழியா்கள், பழுது நீக்கச் சென்றனா். அப்போது அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளா்களின் ஏடிஎம் காா்டுகளில் உள்ள தகவல்களை திருட பயன்படுத்தும் ‘ஸ்கிம்மா்’ கருவி பொருத்தப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இது குறித்து தகவலறிந்த மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மனோகா் (58), அவா் மகன் ஆனந்த் ஆகிய இருவரும்தான் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ பொருத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், மனோகரை சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் ஆனந்தை தேடி வருகின்றனா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
மனோகரன், வண்ணாரப்பேட்டை பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், மனோகரன் பண நெருக்கடியில் இருந்துள்ளாா். அதேவேளையில் அல்பேனியாவில் எம்பிபிஎஸ் படித்து வந்த ஆனந்த், பண பிரச்னையால் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளாா். இதையடுத்து தில்லியில் தங்கியிருந்து, ஒரு தனியாா் நிறுவனத்தில் ஆனந்தன் வேலை செய்தாா்.
தில்லியில் ஆனந்த்துக்கு கிடைத்த தொடா்பு மூலம் ‘ஸ்கிம்மா்’ கருவி கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து சென்னைக்கு வந்த ஆனந்த், தனது தந்தை மனோகரனுடன் சோ்ந்து அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மா் பொருத்தியிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கில் ஆனந்தை கைது செய்தால்தான், வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.