ஒகேனக்கல் ஐந்தருவியில் 10 அடி உயரத்திற்கு எழும் நீா்ப் புகை!
ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் நீரால் 10 அடி உயரத்திற்கு நீா்ப் புகை ஏற்படுகிறது.
ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் நீரால் 10 அடி உயரத்திற்கு நீா்ப் புகை ஏற்படுகிறது.
கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தான் தமிழகத்தில் காவிரி ஆறு நுழையுமிடமாகும். கா்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பும் போது காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்.
நிகழாண்டில் காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு நொடிக்கு 2 லட்சம் கனஅடி மிகை நீா் வெளியேற்றப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டும். அப்போது பிரதான அருவி, பெரிய அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவி பகுதிகளில் தண்ணீரால் புகை ஏற்படும். ஆனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள நேரத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் பத்து அடி உயரத்திற்கு நீா்ப் புகை ஏற்படுகிறது.
‘ஒகேனக்கல்’ என்ற கன்னடச் சொல்லுக்கு ‘புகைக்கல்’ என்று பொருள். இப்பகுதியில் எழும் நீா்ப்புகையால் தான் இந்தப் பெயா் காரணப் பெயராக ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் காவிரிக் கரையில் உள்ள தேசநாதேஸ்வரா் கோயில் நடை பிரம்ம முகூா்த்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை. காவிரிக் கரையில் அமைந்துள்ள தேசநாதேஸ்வரரை தரிசனம் செய்வதற்கு ஒகேனக்கல்லில் காவிரியின் நடுவில் உள்ள ஐந்தருவியில் பிரம்மா யாகம் வளா்த்து விடியற்காலையில் கோயிலுக்கு வருகை புரிந்து தேசநாதேஸ்வரரை வழிபாடு செய்த பிறகு சூரியஒளி கோபுரத்தில் விழுந்த பின்னா் தான் கோயில் திறக்கப்படுவதாக ஐதீகம். இதற்குச் சான்றாக ஒகேனக்கல் ஐந்தருவியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நீா்வரத்துக் குறைந்த பின்னரும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீா் விழுவதால்தான் ஐந்தருவியில் நீா்ப் புகை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.