தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு: 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு

DIN

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமிகளுக்கு ஏராளமான நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் முதன் முதலாக கடந்த 1955 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு கால கட்டங்களில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்த நிலையில், கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு துவங்கி உள்ளது.

அதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம் ஆகியோருடன், நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் திருச்சி தர்மராஜன், திருவண்ணாமலை குமார், விழுப்புரம் குருமூர்த்தி ஆகிய  6 பேர் கொண்ட குழுவினர் இன்று கோயிலுக்கு வந்தனர். அவர்களை தீட்சிதர்கள் கோயிலுக்குள் அமர வைத்து நகைகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு கடைசியாக நகைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதன் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம்தான் தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நகை சரிபார்ப்பு ஆய்வு நடந்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்குரைஞர் சந்திரசேகர் கூறுகையில்,

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தனி சமய பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எந்தவித ஆய்வையும் மேற்கொள்ளக்கூடாது. இது குறித்து நாங்கள் பலமுறை கடிதம் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் கடந்த 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக நகைகள் சரிபார்ப்பு ஆய்வுக்கு ஒத்துழைத்து உள்ளோம். தீட்சிதர்களின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை நிரூபிக்கவே நகை சரிபார்க்க ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.

2005 ஆம் ஆண்டு வரை நகைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளதால் 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் வரப்பட்டுள்ள நகைகள், கொடுக்கப்பட்டுள்ள ரசீது அதன் எடை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். நடராஜர் கோயில் பற்றி பொது வெளியில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதைத் தடுக்க இனி வரும் காலங்களில் அனைத்தையும் நாங்களே ஆடிட்டிங் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வைத்து அவற்றைச் சரி பார்த்து வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT