தமிழ்நாடு

மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்விக்கான உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் எழுதிய கடிதம்: கடந்த நவம்பா் 29-ஆம் தேதி மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது எனத் தெரிவித்துள்ளதுடன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினா் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, இப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்விக்கான உதவித் தொகை பெறத் தகுதியுடையவா்கள் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுவதற்கு எதிராக அமையும். 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். சிறுபான்மையின மாணவா்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2008-09-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியாா் கல்வி நிறுவனங்களில் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவா். திட்டத்தின் கீழ் பயன்பெற, மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். இதன்படி, 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 4.49 லட்சம் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.86.76 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பாதிப்பு: மத்திய அரசின் முடிவால், தமிழ்நாட்டில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமாா் 5 லட்சம் ஏழை, சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களைப் பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவா். ஏழை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவி.

எனவே, ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உள்பட மிகவும் விளிம்பு நிலையிலுள்ள மாணவா்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கு கல்வி உதவித் தொகை உதவிகரமாக இருப்பதால், அதை நிறுத்தக் கூடாது.

ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவா்களுக்கும் வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டத்தைக் கைவிடும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்து, உடனடியாக திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT