ஸ்ரீபெரும்புதூர்: மின் கம்பியை மிதித்ததில் வடமாநில இளைஞர்கள் இருவர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கனமழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து நேற்று முதலே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் புயலின்போது மரம் முறிந்து விழுந்தது. இதனால் மின் கம்பியும் அறுந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் சிப்காட்டிற்கு வேலைக்குச் செல்ல அவ்வழியாக நடந்து வந்த வடமாநில இளைஞர்கள் இருவர் மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.