தமிழ்நாடு

அமைச்சரானாா் உதயநிதி ஸ்டாலின்: இளைஞா் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு

DIN

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.
 இதற்கான நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.
 உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஆளுநர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள தர்பார் அரங்கத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
 உதயநிதி ஸ்டாலினுடன் அவரது தாயும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான துர்கா, உதயநிதியின் மனைவி கிருத்திகா, மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் வந்தனர். முன்னதாக, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வந்திருந்தனர்.
 பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற ஆளுநர் மாளிகைக்கு காலை 9.20 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரை மலர்க்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார்.
 வழக்கமான முறைப்படி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உதயநிதி ஸ்டாலினை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' எனக் கூறி அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, பதவியேற்பு, ரகசிய காப்பு உறுதிமொழிகளில் அவர் கையொப்பமிட்டார்.
 காலில் விழுந்து ஆசி... மேடையில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு உதயநிதி மலர்க்கொத்துகளை வழங்கினார். அப்போது, முதல்வரின் காலில் விழுந்து உதயநிதி ஆசி பெற்றார்.
 அமைச்சரவையில் புதிய முகமாக உதயநிதி இணைந்ததால், ஆளுநர், முதல்வர் ஆகியோருடன் அமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
 அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதன் மூலம் தமிழக அமைச்சரவை எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது. தனது பணிகள் காரணமாக, அமைச்சர் கீதாஜீவன் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பழனிசாமி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
 பதவியேற்பு நிகழ்ச்சியில், பாஜக சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் சார்பில் பேரவை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரவை குழுத் தலைவர் நாகை மாலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரவை குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம்
 தமிழக அமைச்சரவையில் நான்கு அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 அமைச்சர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் சில துறைகள் சேர்க்கப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளன.
 புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.
 கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு, சுற்றுலாத் துறையும், சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு வனத்துறையும் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு கூடுதல் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் ஆர்.காந்தி, சு.முத்துசாமி ஆகியோரிடமிருந்து ஒருசில துறைகள் நீக்கப்பட்டுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT