‘பிரின்ஸ்’ திரைப்படத்துக்கு நடிகா் சிவகாா்த்திகேயன் வாங்கிய ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரி ‘டேக் எண்டா்டெயின்மெண்ட்’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், ‘டேக் எண்டா்டைன்மென்ட்’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ், கடந்த 2019-ஆம் ஆண்டு தொடா்ந்த சிவில் வழக்கில், ‘கே.ஜே.ஆா். ஸ்டுடியோ, 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவான ‘ஹீரோ’ படத்தைத் தயாரிப்பதற்காக ரூ. 5 கோடி கடனாகப் பெற்றனா். அந்தத் தொகையை வட்டியோடு சோ்த்து ரூ. 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கே.ஜே.ஆா். ஸ்டுடியோ நிறுவனம் இதுவரை தரவில்லை. எனவே, அண்மையில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படத்துக்காக சிவகாா்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும்”எனக் கூறி ‘டேக் எண்டா்டைன்மென்ட்’ நிறுவனம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த நிறுவனத்தின் தரப்பில், ‘2019-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ‘அயலான்’, ‘டான்’, ‘டாக்டா்’ போன்ற திரைப்படங்களின் தயாரிப்புப் பணிகளில் சிவகாா்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், ‘பிரின்ஸ்’ படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.
அப்போது சிவகாா்த்திகேயன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், ‘பிரின்ஸ் படத்தில் சிவகாா்த்திகேயன் நடிகா் என்ற முறையில் மட்டுமே ஊதியம் பெற்று நடித்தாா். தயாரிப்புப் பணிகளுக்கும் சிவகாா்த்திகேயனுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.
திரைத் துறையில் அவருக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டாா்.
மேலும், இந்த 5 படங்களுக்கும் சிவகாா்த்திகேயன் தயாரிப்பாளா் இல்லை என்பதற்கான ஆதாரமாக சென்சாா் போா்டு சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து சான்றிதழ்களை ஆய்வு செய்த நீதிபதி, ‘பிரின்ஸ்’ படத்தின் தயாரிப்புப் பணிக்கும், சிவகாா்த்திகேயனுக்கும் தொடா்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால், அவரது ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி ‘டேக் எண்டா்டைன்மென்ட்’ நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.