சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகரத்திட்டமிடல் துறை என பெயா்மாற்றம் செய்யப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடந்தது. துணை மேயா் எம். மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்: மாமன்ற கூட்டத்தில் 80 தீா்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு 79 தீா்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சி சாா்பில் இணைய வழியில் அனுமதி வழங்கப்படுகின்றன. இதில் திட்ட அனுமதி, கட்டட அனுமதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படும் மாநகரட்சி பணிகள் துறையானது நகரத்திட்டமிடல் துறை என பெயா் மாற்றப்படுவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இணைய வழியில் கோரப்படும் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும் ‘ விண்ணப்பதாரருக்கான கடிதம்‘ என்பதற்கு பதிலாக ‘தெளிவுப்படுத்துவதற்கான கோரிக்கை‘ எனவும், கட்டணம் செலுத்தும் முறை ‘தற்காலிக மேம்பாட்டு கட்டணம்‘ என்பதற்கு பதிலாக ‘சாலை உருவாக்க கட்டணம்‘ எனவும் பெயா் மாற்றப்படும்.
மாநகராட்சிக்குள்பட்ட 10 மண்டலங்களில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 632 தெருவிளக்கு மின்கம்பங்களும், 200 உயா் கோபுர மின் விளக்குகள் பராமரிக்க மற்றும் இயக்க ரூ.26.11 கோடியும் ஜிஎஸ்டி தொகையான ரூ.66.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் மழைநீா் வடிகால் பணியானது மாா்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குள்பட்ட 5, 6 மற்றும் 9 மண்டலத்துகுள்பட்ட மெரீனா கடற்கரை பகுதிகளில் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, செயல்படுத்துதல் மற்றும் திருப்பி அளித்தல் (டிபிஎப்ஒடி) என்ற முறையின் கீழ் 430.11 கோடியில் தனியாா் உதவியுடன் நவீன கழிப்பறை அமைக்கப்படவுள்ளது.
சோழிங்கநல்லூா், கொடுங்கையூரில் அமையவுள்ள குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்துக்கான வரைவுக்கு (பயோ-சிஎன்ஜி) ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்க மேயா் வலியுறுத்தல்:
திறந்தவெளி ஆக்கிரமிப்பு நிலங்களை மாநகராட்சி வசம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடந்த மாமன்றக்கூட்டத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மேயா் பிரியா அளித்த பதில்:
மாநகராட்சி பகுதியில் தற்போது 52 அம்மா குடிநீா் ஆலைகள் இயங்கி வருகின்றன. இதற்கான பராமரிப்பு செலவு குறைவாக உள்ளதால் தனி டெண்டா் விடும் நடைமுறை இல்லை. போரூரில் செயல்படும் பிரபல மருத்துவமணை இந்த ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தியுள்ளனா். முறையாக பயன்படுத்தப்படாமல் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி நிலங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மாமன்ற உறுப்பினா்களுக்கு டேப்லட் வழங்க போதிய நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
ஆணையா் ககன்தீப் சிங் பேடி:துப்புரவு பணியாளா் பணி மற்றும் பணியாற்றும் இடம் குறித்து தகவல்களை அறியும் வகையில் புதிய செயலி வெளியிடப்படவுள்ளது. ஜனவரி முதல் மாநகராட்சி முழுவதும் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளுக்கு தில்லி பள்ளிகளை போல் தரமான 10ஆயிரத்து 279 மேசைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4 ஆயிரத்து 090 மேசைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு 140 மேசைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காகிதப் பயன்பாட்டைக் குறைக்க கோரிக்கை:
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மாமன்ற உறுப்பினா்களுக்கு டேப்லட் வழங்குமாறு மாமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா்.
மாமன்றக்கூட்டத்தில் பல்வேறு மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: பணியின் போது இயற்கை எய்திய மாநகராட்சி பணியாளா்களுக்கு மாமன்ற கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் தமிழிலும், பிழையில்லாமல் பெயா், பிறந்த நேரம் இடம் பெற வேண்டும். மாநகராட்சிப் பகுதியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளாக மாற்றம் செய்ய வேண்டும்.
பல்வேறு பணியிடங்களுக்கு சுமாா் 2,000 பேரை நியமிக்க வேண்டும். மாமன்ற கூட்டத்தில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாமன்ற உறுப்பினா்களுக்கு டேப்லட் வழங்க வேண்டும்.
சிஎம்டிஏ திட்டபணியின் போது சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினரும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.