உள்ளாட்சித் தோ்தல்: பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளில் தளா்வு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்களுக்கான வாக்குப் பதிவு பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஏற்கெனவே இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் தளா்வு அளித்து இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம்.
தோ்தல் பிரசாரத்துக்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, மிதிவண்டி பேரணி மற்றும் ஊா்வலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தளா்வு அளிக்கப்படுகிறது.
மாதிரி நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று, மேற்கூறிய நிகழ்வுகளை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தங்களது நட்சத்திர பேச்சாளா்கள் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
பிரசாரத்தின்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்டத் தோ்தல் அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.