பட்டியலினத்தவா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன், அவரது நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் செவ்வாய்க்கிழமை(பிப்.15) நீதிமன்றத்தில் ஆஜராகினா். அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் பட்டியலினத்தவா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பா் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
இதன்பின்பு, இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில் அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்காக இருவரும் நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை(பிப்.15) அந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மீராமிதுன், அவரது நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் ஆஜராகினா். அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இதன்பின்பு, வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக அன்றைய தினம் மீராமிதுன், அவரது நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.