முகப்பு
தமிழ்நாடு

ரூ.28 கோடியில் நவீனமயமாக்கப்பட்ட சத்திரம் பேருந்து  நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது

ரூ.28 கோடியில் நவீனமயம்: சத்திரம் பேருந்து  நிலையம் இன்று மக்கள்  பயன்பாட்டிற்கு வந்தது. அமைச்சர்கள் கொடியசைத்து பேருந்துகளை இயக்கி வைத்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
ரூ.28 கோடியில் நவீனமயமாக்கப்பட்ட சத்திரம் பேருந்து  நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது
பகிர்:

திருச்சி: ரூ.28 கோடியில் நவீனமயம்: சத்திரம் பேருந்து  நிலையம் இன்று மக்கள்  பயன்பாட்டிற்கு வந்தது. அமைச்சர்கள் கொடியசைத்து பேருந்துகளை இயக்கி வைத்தனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரூ.28 கோடியில் மேம்படுத்தப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் பள்ளி, கல்லூரிகளும், வர்த்தக நிறுவனங்களும் நிரம்பியுள்ளன.

Advertisement

இப்பேருந்து நிலையத்திற்கு  தினமும் 873 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் 5,945 முறை வந்து செல்கின்றன.

பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்ட நிதியில் இப்பேருந்து நிலையத்தை ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.  இதனையடுத்து இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேருந்துக்களுக்கு முன்பாக கொடியசைத்து வைத்து சத்திரம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். 

சத்திரம் பேருந்து நிலையம் மொத்தம் 11,852 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 7030 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டடங்கள் கட்டியுள்ளனர்.

ஒரே சமயத்தில் 15 பேருந்துகள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 54 கடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறையும், தாய்மார்கள் பாலூட்டும் அறையும்  இடம் பெற்றுள்ளன.

முதல் தளத்தில் உணவகம், பொருள்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அறை, உணவகம்  ஆகியவையும் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ்,  சௌந்தரபாண்டியன், பழனியாண்டி,  ஸ்டாலின் குமார், அப்துல் சமது,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பேருந்துகளில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்து பேருந்து நிலையத்திற்குள் வந்து இறங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments