மாநில நிதியில் கட்டப்படும் கல்லூரிகளில் உரிமை பறிப்பு: முதல்வர் ஸ்டாலின்
மாநில நிதியில் கட்டப்படும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்கையில் உரிமை பறிக்கும் நிலை நீட் தேர்வு மூலம் எழுந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பேசினார்.
மாநில நிதியில் கட்டப்படும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்கையில் உரிமை பறிக்கும் நிலை நீட் தேர்வு மூலம் எழுந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று பேசியதாவது:
மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகளில் எந்தவொரு நுழைவுத் தேர்வும் ஏழை எளிய மாணவர்களின் நலனை பாதிக்கக்கூடும். ஆகவே, நுழைவுத் தேர்வை தவிர்த்து பள்ளிக்கல்வி திறனை மட்டும் அடிப்படையாக கொண்டு கல்லூரி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதை மாற்ற கூடாது என தமிழக அரசு உறுதியாக உள்ளது.
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரி சேர்க்கை நடக்கவேண்டும். இதனடிப்படையில் தான் மாநிலளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது.
ஆனால், கடந்த காலங்களில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, மருத்து திருத்த சட்டம் மூலம் மாணவர்களின் நலனை வெகுவாக பாதித்துள்ளனர்.
மாநில அரசு நிதியிலிருந்து கட்டப்படும் கல்லூரிகளில் எவ்வாறு மாநில மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது முடிவெடுப்பதை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பறித்துள்ளது.
நுழைவுத் தேர்வு என்பது பணமுள்ளவர்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது. 12 ஆண்டுகள் படிக்கும் பள்ளிக் கல்வித் திறனையே அர்த்தம்மற்றதாக நீட் தேர்வு முறை அமைந்துள்ளது.
இது மாணவர்களின் கல்விக் கனவு மட்டுமல்ல இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைக்கும் முயற்சியாக உள்ளது. இதை வேடிக்கை பார்க்க முடியாது.
தமிழக சட்டப்பேரவையால் செப்டம்பர் 19ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்மொழிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. நானே நேரில் சந்தித்து பேசிய பின்பும் அனுப்பவில்லை.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் சட்ட முன்மொழிவு குறித்தும் மனு அளித்தனர்.
தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கவில்லை. ஆகையால், அவரது அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
எனவே, நீட் தேர்வு விலக்கு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாளை மறுநாள்(ஜன 8) அழைப்பு விடுக்கின்றேன்.
அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்து அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.