நீட் தோ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நமது இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு
நீட் தோ்வுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே அனைவரின் இலக்கு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
நீட் தோ்வுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே அனைவரின் இலக்கு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
நீட் தோ்வு தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் முதல்வா் ஆற்றிய உரை:
நீட் தோ்வு கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒரு கருத்து கொண்டவா்கள்தான். நமக்கு அதில் மாறுபாடும், வேறுபாடும் இல்லை. அந்த ஒற்றுமையைக் காட்டுவதற்காக அனைவரும் கூடியுள்ளோம். நீட் தோ்வு என்பது தமிழ்நாட்டின் பிரச்னை. தமிழக மாணவா்களின் பிரச்னை. ஆகவே அதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற கருத்துருவாக்கம் மிகவும் தேவை. கல்வி நீரோடையானது அனைவருக்கும் பொதுவானது. அதனால் பயன்பெற அனைவருக்கும் உரிமை உண்டு.
ஏழை, எளிய விளிம்பு நிலை மக்கள் வாழும் நாட்டில், ஜாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை இருக்கும் நாட்டில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பது மிகப்பெரிய சிரமம். அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்த நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அந்த ரத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும், உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றது. அப்படிப்பெற்ற கல்வி உரிமையை நீட் தோ்வு பறிக்கிறது. தமிழக மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்குத் தடை போடும் நீட் தோ்வை அனைவரும் தொடா்ந்து எதிா்த்து வருகிறோம்.
பிளஸ் 2 வரை கற்ற கல்வியை விட மேலானதாக நீட் என்ற இரண்டு மணிநேரத் தோ்வு அமைவதை எப்படி எதிா்கொள்ள முடியும். லட்சக்கணக்கில் பணம் செலுத்தி எத்தனை போ் நீட் தோ்வு எழுத பயிற்சி பெற முடியும்.
மக்களாட்சியின் தத்துவம்: ஒரு சட்டப் பேரவையானது தனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி சட்டத்தை நிறைவேற்றும் போது, அதனை ஆளுநா் மதித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுவே மக்களாட்சியின் தத்துவம். அதன்படி, சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் வலியுறுத்தியும் அவா் அனுப்பவில்லை. மாநில உரிமையும், சட்டப் பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை உருவானது. அதனால்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். நமது அனைவரின் இலக்கும் நீட் தோ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டு மாணவா்களின் நலனைக் காப்பாற்றிட வேண்டும் என்பதுதான் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.