தமிழ்நாடு

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் சக்தி: புதுச்சேரி தேசிய இளைஞா் விழாவில் பிரதமா் பேச்சு

DIN


புதுச்சேரி: இந்தியாவின் எல்லையற்ற சக்தியாக மக்கள்தொகையும், ஜனநாயகமும் உள்ளதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது என்று, புதுச்சேரி தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டின் 75}ஆவது சுதந்திர தின ஆண்டு, விவேகானந்தர் பிறந்த நாள், அரவிந்தரின் 150}ஆவது பிறந்த நாள் ஆகியவற்றின் தொகுப்பாக, புதுச்சேரியில் 25-ஆவது தேசிய இளைஞர் விழா}2022 இரு தினங்கள் நடைபெறுகிறது. மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை, புதுவை அரசு சார்பில் இணைய வழியில் நடைபெறும் இந்த விழா புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி அண்ணா சாலையிலுள்ள தனியார் உணவக அரங்கில் இதன் தொடக்க நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் ரூ.122 கோடியில் கட்டப்பட்ட தொழில்நுட்ப மையத்தையும், புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தையும் திறந்துவைத்தார்.
பின்னர், தேசிய இளைஞர் விழாவைத் தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. நாட்டின் திறன்களிலும், கனவுகளிலும் இளைஞர்கள் உள்ளனர். உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட முடியும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களிடம் நிறைந்துள்ளது. நமது இளைஞர்கள் உலகளாவிய செழுமைக்கான குறியீட்டை எழுதுகிறார்கள்.
தேசிய உணர்வு பிளவுபடும் போதெல்லாம் இளைஞர்கள் நாட்டை ஒற்றுமை இழையால் தைக்கின்றனர். குரு கோவிந்த் சிங், சாஹிப் ஜாதே போன்றோரின் தியாகங்கள் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன. இந்தியாவின் சுதந்திரத்துக்காக பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இளம் புரட்சியாளர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஆன்மிக மறுமலர்ச்சி தேவைப்படும் போதெல்லாம் அரவிந்தர், சுப்பிரமணிய பாரதி போன்ற ஞானிகள் வருகிறார்கள்.
இந்தியாவின் சக்தி: இந்திய இளைஞர்கள் ஜனநாயக விழுமியங்களைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் தொழில்நுட்ப வசீகரமும், ஜனநாயக உணர்வும் உள்ளது. கடின உழைப்புத் திறனுடன், எதிர்காலம் பற்றிய தெளிவும் உள்ளது. அதனால்தான், இந்தியா இன்று சொல்வதை, நாளைய குரலாக உலகம் கருதுகிறது. இந்தியாவின் எல்லையற்ற இரண்டு சக்திகளாக மக்கள்தொகையும், ஜனநாயகமும் உள்ளதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவில் இன்று 50 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் (புதிய சிறு, குறு நிறுவனங்கள்) வலுவான சூழல் உள்ளது. அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொற்றுநோய் கால சவாலுக்கு மத்தியில் தொடங்கப்பட்டன. "போட்டியிடு, ஆர்வமுடன் பங்கெடு, ஒன்றுபட்டு வெல்' இதுவே புதிய இந்தியாவின் மந்திரமாகும்.
ஆண், பெண் சமம் என்று அரசு நம்புவதால்தான், பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர்களின் திருமண வயதை 21}ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்தது. இதன்மூலம், அவர்களும் தங்கள் வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கு போதிய காலம் கிடைக்கும். இது அவர்கள் வாழ்வில் முக்கியத்துவத்தைத் தரும் என்றார் பிரதமர்.
விழாவுக்கு முன்னிலை வகித்து புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாவது:
தேசிய இளைஞர் விழாவை நடத்துவதில் புதுவை பெருமிதம் கொள்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கவும், காப்பாற்றவும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.
புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் திறந்துவைத்ததில் பெருமை கொள்கிறோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைகளின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்ததற்கு நன்றி என்றார் அவர்.
பங்கேற்றோர்: விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை செüந்தரராஜன், மத்திய சிறு,குறு, நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, மாநில அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி, எம்எல்ஏக்கள் ஜான்குமார், எல்.கல்யாணசுந்தரம், ஏ.கே.டி. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், மத்திய சிறு,குறு, நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் நாராயண் ராணே உள்ளிட்டோர் இணையவழியில் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், தட்சணாமூர்த்தி எம்எல்ஏ, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், அரசு செயலர்கள் அசோக்குமார், தி.அருண், கல்வித் துறை இயக்குநர் ருத்ரகெüடு, ஏடிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இணையவழியில் 2.5 லட்சம் பேர்: 25}ஆவது தேசிய இளைஞர் விழா நிகழ்வுகள் பல்வேறு பங்கேற்பாளர்களின் கருத்துரைகளுடன் இணைய வழியில் நடைபெற்றது. இந்த விழாவில் புதுவை, தமிழகம் உள்பட நாடு முழுவதிலிருந்தும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணையவழியில் பதிவு செய்து பங்கேற்றனர். இளைஞர் விழா நிகழ்வுகள் வியாழக்கிழமை (ஜன.13) இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT