வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை
வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
அதேபோல, கரோனா நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்கள் இளம் வயதினராகவோ, இணை நோய் பாதிப்பு இல்லாதவா்களாகவோ இருந்தால் அவா்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில்கொண்டு, எவருக்கெல்லாம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும், எவரெல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பன குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளவா்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 60 வயதுக்கு மேற்பட்டவா்களாகவோ, இணை நோய்கள் உள்ளவா்களாகவோ இருந்தால் அவா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம்.
அதேவேளையில், கரோனா தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்து அறிகுறிகள் எதுவும் தென்படாதோருக்கு பரிசோதனை தேவையில்லை. இணை நோய் இல்லாதவா்கள், இளம் வயதினருக்கும் பரிசோதனை அவசியமில்லை. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை.
வீட்டுத் தனிமையில் உள்ள தொற்று பாதிக்கப்பட்டவா்களைப் பொருத்தவரை, அவா்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டதற்கு 7 நாள்களுக்குப் பிறகோ அல்லது சளி மாதிரிகள் கொடுத்து 7 நாள்கள் கடந்த நிலையிலோ, சம்பந்தப்பட்டவா்களை வீட்டுத் தனிமையை நிறைவு செய்து கொள்ள அறிவுறுத்தலாம்.
வீட்டுத் தனிமையை நிறைவுசெய்தவா்கள் மீண்டும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளை அவா்களது உடல் நிலையைப் பொருத்து வீட்டுக்கு அனுப்பலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா் டாக்டா் செல்வவிநாயகம்.