தமிழ்நாடு

கடன் தள்ளுபடியால் நிதி இழப்புகளை சந்திக்கும் கூட்டுறவுச் சங்கங்கள்!

ஆ. நங்கையார் மணி

கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டபோதிலும், அதற்கான தொகையை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தால், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் நிதி இழப்பு மற்றும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
 தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கில், கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன. வைப்புதாரர்களின் முதலீட்டு தொகை மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்படும் கடன் தொகை மூலம் இந்த கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்படும் கடன் தொகையை மூலதனமாகக் கொண்டே இயங்கி வருகின்றன.
 இதுபோன்ற சூழலில், கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன் தள்ளுபடி போன்ற அரசியல் கட்சிகளின் அறிவிப்புகளால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது. கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.
 மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளுக்கான செலவுத் தொகை உடனடியாக விடுவிக்கப்படாததாலும், கூட்டுறவுச் சங்கங்கள் வருவாய் இழப்புகளையும், நிர்வாகச் சிக்கல்களையும் சந்தித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
 பயிர்க் கடன் தள்ளுபடியில் நிதி ஒதுக்கீடு இல்லை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, ரூ.12,110 கோடிக்கான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதிமுக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.5ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும், அந்த நிதி இதுவரை கூட்டுறவுச் சங்கங்களுக்கு விடுவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மீதமுள்ள ரூ.7,110 கோடி பயிர் கடன் தொகைக்கு திமுக அரசின் நிதி நிலை அறிக்கையில் எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
 அதேபோல், கடந்த திமுக ஆட்சியின்போது (2006 -2011) பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான நிதியில் தற்போது வரை ரூ.500 கோடி வழங்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருவதாக, கூட்டுறவுச் சங்கத்தினர் கூறுகின்றனர்.
 நகைக் கடன் தள்ளுபடியிலும் சங்கங்களுக்கு சிக்கல்: தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்டுள்ள ரூ.48.85 லட்சம் நகை கடனில், ரூ.35.37 லட்சம் நகை கடன்களுக்கு தள்ளுபடிக்கான தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், கடன் பெற்றிருந்த 22 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேரின் ரூ.13.47 லட்சம் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தள்ளுபடி சலுகை கிடைக்காத கடன்தாரர்கள், அசல் மட்டுமின்றி வட்டியையும் செலுத்தாமல் தங்களுக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
 இதனால், கூட்டுறவுச் சங்கங்களின் வரவு-செலவு பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த 2021 மார்ச் 31ஆம் தேதி வரை அசல் மற்றும் வட்டி என ரூ.6 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை, உறுப்பினர் கடன் கணக்கில் வரவு வைத்து முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
 எனவே, அந்த தொகைக்கான வட்டி கிடைக்காமல் சங்கங்களுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும், வைப்புத் தொகை செலுத்தியவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திருப்பி வழங்க முடியாமலும், பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க முடியாமலும், வங்கி நிர்வாகங்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
 நியாயவிலைக் கடைகளுக்கு 3 ஆண்டுகள் நிலுவை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில், கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், சரக்குகளை கையாள்வதற்கான லாரி வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கான தொகை, அந்தந்த ஆண்டுக்கு உடனடியாக விடுவிக்கப்படுவதில்லை.
 இந்தக் கடன் சுமைகளையும் அந்தந்த சங்கங்களே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போது வரை கடந்த 3 ஆண்டுகளுக்கான செலவினத் தொகை நிலுவையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
 கடன் தள்ளுபடிக்கு முற்றுப்புள்ளி தேவை: கடன் தொகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் நிலையில், தவணை தவறிய கடன் தொகைக்கான இதர செலவுகள் (நோட்டீஸ் விநியோகிப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கை, பத்திரிகை விளம்பரம்) வழங்கப்படுவதில்லை. தவணை தவறிய கடன் தொகைகளுக்கான அபராத வட்டியும் வழங்கப்படுவதில்லை.
 கடனுக்கான தள்ளுபடி ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் நிலையில், அதற்கான தொகையை 5 தவணைகளாக அரசு வழங்குவதால், கூட்டுறவுச் சங்கங்கள் நிதி இழப்பை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், மீண்டும் பயிர்க் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கும், விதவைகளுக்கும் முறையான ஆவணங்கள் இல்லாமலும், கடனில்லா சான்று பெற்று வழங்கவேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றாமலும் கடன் வழங்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் நெருக்கடி அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 ஒவ்வொரு முறையும் கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, கூட்டுறவுச் சங்கங்கள் நிதி இழப்பையும், நிர்வாக நெருக்கடியையும் சந்தித்து வருகின்றன.
 மேலும், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலின்போது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதற்காக, கூட்டுறவுச் சங்கங்களில் பலர் கடன் பெறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
 எனவே, இனிவரும் காலங்களில் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பினை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட்டுறவுப் பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டக் கூட்டுறவு ஊழியர்கள் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலர் மு. சாதிக் அலி கூறியதாவது: கூட்டுறவுச் சங்கங்கள் நிர்வாக தடுமாற்றத்தை தவிர்க்க வேண்டுமெனில், அரசு அறிவித்த பயிர்க் கடன், நகை கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன்களுக்கான தள்ளுபடி தொகையை ஒரே தவணையில் வழங்கவேண்டும். ரூ.12,110 கோடிக்கான பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டபோதிலும், அதில் ரூ.7,110 கோடிக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
 நபார்டு வங்கியிடமிருந்து மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கி வழியாக ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கங்களும் பெறும் தொகையே, மக்களுக்கு கடனாக வழங்கப்படுகிறது. அதனை திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற பொறுப்பை பொதுமக்களிடம் உருவாக்குவதற்கு, அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்வது அவசியம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT