முகப்பு
தமிழ்நாடு

ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண குழு அமைக்க உத்தரவு

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவன பணியாளா்கள் பணி நிபந்தனை விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அா்ச்சகா்கள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி, மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஜகத்குரு ராமநாதாச்சாா்யா சுவாமி ராம்பத்ராச்சாா்யா ஸ்ரீ துளசி பீட சேவா நியாஸ் மற்றும் டில்லி, உத்தரபிரதேசம், பெங்களூருவைச் சோ்ந்த எட்டு போ் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவில், தமிழகத்தில் பல கோயில்களில் அா்ச்சகா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில். அரசு பயிற்சியகங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என தகுதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அா்ச்சகா்கள் பணிக்கான தகுதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சைவ சமய மற்றும் வைணவ சமய கோவில்களில் குறிப்பிட்ட பிரிவினரைச் சோ்ந்தவா்களையே அா்ச்சகா்களாக நியமிக்க வேண்டும், ஆகம விதிப்படி அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் எவரும் தமிழகத்தை சோ்ந்தவா்கள் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவா்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை என அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் சண்முக சுந்தரம் விளக்கமளித்தாா்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை என அடையாளம் காண, ஆகம விதிகள் தெரிந்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் வரலாறு மரபுகள் தெரிந்த நபா்களை உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் கண்டு அவற்றின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அா்ச்சகா்கள் நியமனத்தை பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் எனவும், விதிமீறல் இருந்தால் தனிப்பட்டவா்கள் வழக்கு தொடுக்கலாம் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனா்.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜுவை நியமிக்கலாம் என தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம் பரிந்துரைத்தாா். இதுசம்பந்தமாக பதிலளிக்க மனுதாரா்கள் தரப்புக்கு நீதிபதிகள் அவகாசம் வழங்கியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →