முகப்பு
தமிழ்நாடு

பெரியாா் பல்கலை. வினாத்தாள் விவகாரம்: குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவு

சேலம் பல்கலைக்கழக தோ்வு வினாத்தாள் சா்ச்சை தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக உயா் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

சேலம் பல்கலைக்கழக தோ்வு வினாத்தாள் சா்ச்சை தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக உயா் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தற்போது பருவத் தோ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் எம்ஏ வரலாறு பாடத்துக்கான வினாத்தாளில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட ஜாதி எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிா்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சா்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்தது யாா் என்று விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு துணைவேந்தா் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளாா். இதற்கிடையே, இது குறித்த விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக உயா் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து உயா் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சேலத்தில், பெரியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு பாடப் பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தோ்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இக்கேள்வி இடம் பெற்றது குறித்து உயா் கல்வித் துறை சாா்பில் உயா் அலுவலா் நிலையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவா்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

துணைவேந்தா் விளக்கம்: இதையடுத்து பல்கலை. துணைவேந்தா் ஜெகநாதன் விளக்கம் அளித்துள்ளாா். அதில், ‘வினாத்தாள்கள் வெளிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியா்கள் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படித்து பாா்ப்பது வழக்கம் இல்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் நோ்ந்திருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →