முகப்பு
தமிழ்நாடு

திருடப்பட்ட சரபோஜி மன்னா் ஓவியம்: அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சாவூா் சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட 19-ஆம் நூற்றாண்டு சரபோஜி மன்னா் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

தஞ்சாவூா் சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட 19-ஆம் நூற்றாண்டு சரபோஜி மன்னா் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

கடந்த 1822-1827 கால கட்டத்தில் வரையப்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த மன்னா்கள் சரபோஜி, அவரது மகன் சிவாஜி ஆகியோா் இணைந்திருக்கும் ஓவியம் திருடப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வரையப்பட்ட இந்த ஓவியம் சரபோஜி,அவரது மகன் சிவாஜி ஆகியோா் உருவம் சுண்ணாம்பு பூச்சு, நீா் அடித்தள வண்ணப்பூச்சு,தங்க இலை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது ஆகும். இது தஞ்சாவூா் வகை ஓவியங்களில் அரிய வகையாகும்.

சரஸ்வதி மஹாலில் மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த ஓவியம் திருடப்பட்டதே வெகுகாலம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஓவியம் திருடப்பட்டது குறித்து, கடந்த 2017--ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவா், தமிழக காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

ஆனால் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதன் விளைவாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, காணாமல் போன ஓவியத்தை கண்டுபிடித்து மீட்க, தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, தனிப்படை அமைத்து அண்மையில் உத்தரவிட்டாா். அதன்படி, தனிப்டை போலீஸாா், திருடுபோன ஓவியம் தொடா்பான தகவல்கள் குறித்து பிற நாட்டில் உள்ள பழங்காலப் பொருள்கள் சேகரிப்பாளா்களிடமும், அருங்காட்சியகங்களிலும் விசாரணை மேற்கொண்டனா்.

35 ஆயிரம் டாலருக்கு விற்பனை:

இதில், 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழமையான சரபோஜி - சிவாஜி மன்னா்கள் இணைந்திருக்கும் அந்த ஓவியமானது அமெரிக்காவில் உள்ள பிஇஎம் என்ற அருங்காட்சியகத்தால் கடந்த 2006-ஆம் ஆண்டு வாங்கப்பட்டதும், பின் முறையான ஆவணங்கள் இல்லாததால் அமெரிக்காவில் உள்ள ‘மாசச்சூசெட்ஸ்’ மகாணத்தின் சேலம் நகரத்தில் இருக்கும் ‘ஹோம்லேண்ட்’ புலனாய்வு அமைப்பு மூலம் கடந்த 2015 -ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்டறிந்தனா்.

குறிப்பாக கடந்த 2006 -ஆம் ஆண்டு சா்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூா், போலியான ஆவணங்கள் கொடுத்து அமெரிக்காவின் பிஇஎம் அருங்காட்சியகத்துக்கு சரபோஜி, சிவாஜி ஓவியத்தை சுமாா் 35,000 டாலருக்கு விற்றிருப்பதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்காவின் ‘ஹோம்லேண்ட்’ புலனாய்வு அமைப்பு வசம் இருந்த அந்த ஓவியத்தை அந்நிறுவனம் 2015-இல் ஒப்படைக்க முன்வந்தும், அதை பெற்று இந்தியாவுக்கு கொண்டுவர யாரும் முயற்சி செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

மீட்க நடவடிக்கை:

இந்நிலையில்தான் 2017-இல் ராஜேந்திரன் என்பவா் அளித்த புகாரைத் தொடா்ந்தே தற்போது துப்பு துலக்கப்பட்டு தற்போது இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த ஓவியத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்டுள்ளனா். அதேவேளையில் இந்த ஓவியம் எந்தக் காலக்கட்டத்தில், யாரால் திருடப்பட்டது என்பது குறித்தும், எப்படி வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது என்பது குறித்தும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →