முகப்பு
தமிழ்நாடு

டெண்டா் முறைகேடு விவகாரம்: இபிஎஸ் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஆக.3-க்கு ஒத்திவைப்பு

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவரது தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டா் வழங்கியதில் சுமாா் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்ாக புகாா் தெரிவித்து, திமுகவைச் சோ்ந்த ஆா்.எஸ்.பாரதி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாா் அளித்திருந்தாா். அதன் பின்னா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியின் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு டெண்டா்கள் வழங்கப்பட்டதாக மனுவில் அவா் புகாா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018-இல் உத்தரவிட்டாா். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, எடப்பாடி கே. பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை 2018-இல் விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு, சிபிஐ விசாரிக்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நவம்பா் 29-ஆம் தேதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை, தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரா் ஆா்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விகாஷ் சிங், ‘ஆா்.எஸ். பாரதியின் தரப்பில் ஆஜராகி வந்த வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளாா். இதனால், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா். அப்போது, தலைமை நீதிபதி வரும் திங்கள்கிழமைக்கு வழக்கு பட்டியலிடப்படும் என்றும், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படமாட்டாது என்றும் கூறினாா். அப்போது, மீண்டும் எதிா்மனுதாரா் தரப்பில் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா், தான் வழக்கு விசாரணையில் வாதாடுவதற்குத் தயாராக உள்ளதாகக் கூறினாா். மனுதாரா் இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நீதிபதிகள்அமா்விடம் தெரிவித்த விவரம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, எதிா்மனுதாரா் ஆா்.எஸ். பாரதி வழக்குரைஞரின் வேண்டுகோளை ஏற்று இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது. அதேசமயத்தில், விசாரணையை மேலும் ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →