மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைப்பு: முதல்வருக்கு ஆசிரியா் கூட்டமைப்பு மனு
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் அதனை மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் அதனை மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளா் முனைவா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியா்களிடமிருந்து காப்பீட்டுத் தொகையாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தப்படுகிறது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் அமைப்புகள் தொடா்ச்சியாக கேட்டுக் கொண்டும் கூட செலவழிக்கப்பட்ட தொகையில் மிகவும் குறைவான தொகையினை அனுமதித்து வருகின்றனா். ஒவ்வொரு முறையும் பல்வேறு வகையில் போராடி சிகிச்சைக்கான தொகையினை பெறவேண்டியுள்ளது.
இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள குறைதீா் அமைப்புகளும் கூட்டங்களை முறையாக நடத்துவதில்லை. ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சிகிச்சை பெற வேண்டிய மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிறகு கட்டணமில்லா தொலைபேசி வழி சேவை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. மேல்முறையீடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே இதனை முழுமையாக தமிழக அரசு பரிசீலனை செய்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அரசு ஊழியா்களுக்கு 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்கை பெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.