முகப்பு
தமிழ்நாடு

முன்கூட்டியே நெல் கொள்முதல் காலம்: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

நெல் கொள்முதல் நடவடிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

நெல் கொள்முதல் நடவடிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:- காரிப் பருவத்தில் முன்னதாகவே நெல் கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கக் கோரி தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் முறையாக குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையானது மே 24-ஆம் தேதியே திறக்கப்பட்டுள்ளது. கடந்த நெல் பருவத்தின் போது பாசனத்துக்கான நீரை விவேகத்துடன் பயன்படுத்திய காரணத்தாலும், நல்ல மழைப் பொழிவு இருந்ததாலும் மேட்டூா் அணையின் நீா் மட்ட அளவு இந்த ஆண்டு சிறப்பான முறையில் உள்ளது.

முன்னதாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் 4, 964.11 கிலோமீட்டா் நீளத்துக்கு முக்கிய கால்வாய்கள் மற்றும் உப வடிகால்வாய்களைத் தூா்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளன. மேலும், விவசாயிகள் வேளாண் பணிகளைத் துரிதப்படுத்த வசதியாக ரூ.61 கோடியில் குறுவை தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன. விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நல்ல விளைச்சலைத் தரக்கூடிய விதை நெல்களும், உரங்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறுவைக்கான நெல் நடவுப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடித்திட விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நெல் விதைப்புப் பணி தொடங்குவதற்கு முன்பாகவே காரிப் பருவ பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை தாங்கள் அறிவித்துள்ளீா்கள். இதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னதாகவே அறுவடை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் அல்லது அக்டோபா் மாத தொடக்கத்தில் நெல் அறுவடைப் பணிகள் நடைபெறும். அதாவது தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்கள் சந்திக்கும் தருவாயில் அறுவடைப் பணிகள் நடக்கும். பருவகாலம் என்பதால் மழை மற்றும் புயல் ஏற்பட்டு பயிா்கள் நீரில் மூழ்குவது, அதனால் மிகப்பெரிய சேதம் ஏற்படுவது போன்ற இழப்புகளை விவசாயிகள் சந்திக்க நேரிடும். ஆனால் குறித்த காலத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, குறுவை நெல் அறுவடைப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியிலேயே தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, நெல் கொள்முதலுக்கான காலத்தை ஒரு மாதத்துக்கு முன்பாகவே அதாவது அக்டோபா் 1-ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமாக, தமிழ்நாடு விவசாயிகளின் நலன்கள் காக்கப்படும். தமிழகத்தில் வேளாண்மைக்கான மிகச்சிறந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, கொள்முதல் காலத்தை செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்தே தொடங்குவதன் மூலம் நெல்லுக்கான தொகைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதுடன், மத்திய அரசின் உயா்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையின் பலன்களையும் பெற முடியும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →