தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
தமிழகமெங்கும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிவாயலங்களிலும் மகா சிவராத்திரி விழாவை வெகு விமர்சையாக நடத்துவதற்காக, தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் உள்ள காசிவிசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் சிவன் கோவிலில், இன்று நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்காக 15 ஆயிரம் ரூபாய் நிதியை அறநிலையத்துறை வழங்கியுள்ளது. இதுதவிர, பொதுமக்களின் பங்களிப்புடன் சேர்ந்து, விழா வெகு விமர்சையாக, நடைபெற உள்ளது.
இதையடுத்து, இன்று மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. சிறப்பு சொற்பொழிவுடன், இரவு 7.30 மணிக்கு சிறப்பு வழிபாடும், இரவு 8 மணிக்கு முதற்கால அபிஷேகம், ஆராதனை, திருநாவுக்கரச பெருமானின் போற்றி திருதாண்டகம், பாராயணமும் இரவு 11 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், ஆராதனை, பஞ்சாட்சர பதிக பாராயணம் நடைபெறும்.
இரவு 12 மணிக்கு சிவபரம்பொருளை ஒளிரூபமாக வழிபடும் திருவிளக்கு பூஜை வழிபாடு. நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், ஆராதனை மற்றும் திருவாசகம் பாராயணம். அதிகாலை 3 மணிக்கு பஞ்சாட்சர அகண்ட ஜபம் நடைபெறும். தொடர்ந்து, நான்காம் கால அபிஷேகம், ஆராதனை, பூஜை மற்றும் ருத்ர சமஹம் ஹோமம் நடைபெறும்.
இதையடுத்து, அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்குள் சுவாமி பல்லக்கில் புறப்பாடு, மகா தீபாராதனை நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளில், இதுவரை இல்லாமல் இந்த ஆண்டு தமிழக அரசின் நடவடிக்கையால், தம்மம்பட்டி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.