தமிழ்நாடு

‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரை

DIN

தமிழகம் ஏழை மாநில அல்ல, வளர்ந்த மாநிலம் என பட்ஜெட் மீதான பதிலுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.

இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் இன்று பதிலுரை வழங்கினார். அவர் பேசியவாதவது:

“2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 350 கோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு அறிக்கை மே மாதத்திற்குள் குழுவால் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்திக்கடவு திட்டம் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,902.71 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து திட்டங்களிலும் பெரும் பங்கு ஏழைகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது. இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ. 50 கோடி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ. 4,848 கோடி, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்களுக்கு ரூ. 4,816 கோடி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ. 2,800 கோடி, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 480 கோடி உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய நிபுணர் குழு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இந்த குழுவில் உள்ளவர்கள் அரசிடமிருந்து ஒரு ரூபாய் வாங்கவில்லை. போக்குவரத்து போன்ற இதர விஷயங்களுக்கும் பணம் வாங்கியது கிடையாது.

கருணநிதி ஆட்சி முடியும்போது தமிழகத்தின் மொத்த கடன் தொகை உற்பத்தியில் 17.33 சதவிகிதம். ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு 15.55 சதவிகிதம் வரை குறைந்தது. ஆனால், கரோனாவுக்கு முன்னதாகவே 22 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளனர். கரோனாவுக்கு பிறகு 25.84 சதவிகிதமாக உள்ளது. இது படிப்படியாக குறைக்கப்படும்.

நாம் ஏழை மாநிலம் இல்லை, வளர்ந்த மாநிலம். நமது இளைஞர்களுக்கு இலவச பேருந்து சலுகை கொடுத்தால் போதாது, அவர்களுக்கு வேலை தேவை. உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும்.

ஏழை மாநிலத்தில் இளைஞர்கள் 52 சதவீதம் பேர் கல்லூரியில் சேர மாட்டார்கள். 90 சதவீதம் குடும்பத்தினர் செல்போன் வைத்துள்ளார்கள். 75 சதவீத குடும்பத்தினர் சொந்த வீடுகளில் உள்ளார்கள். 75 சதவீதத்தில் 14 சதவீதம் பேர் தான் அரசால் கட்டப்பட்ட வீடுகளில் உள்ளார்கள். 66 சதவீதம் பேரிடம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இது வளர்ந்த மாநிலம்.

வணிக வரியை சிறப்பாக செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும். இதற்காக இரண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்ய கோரிக்கை விடுக்கப்படும். அரசு கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும்.

வரும் ஆண்டில் நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் காலியாக உள்ள 75000 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களாக நவீன மாணவர் விடுதி கட்டப்படும்” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT