ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 5 ஆயிரம் ரேஷன் கடைகளைப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், நசியனூரில் உள்ள தனியாா் அரிசி ஆலை, கங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கினை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் பிரிக்கப்படும்.
கடந்த ஆண்டு 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு இதுவரை 1,567 நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 28.7 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 1,608 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 54 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 57,128 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.126 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10,780 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா்.
இம்மையங்களில் முறைகேட்டைத் தடுக்க, மூட்டைகளைக் கையாளும் ஊழியா்களின் கூலி ஒரு மூட்டைக்கு ரூ.3.25இல் இருந்து ரூ.10ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 கோடி கூடுதல் கூலி வழங்கப்படும். இருந்தும் முறைகேட்டில் ஈடுபட்ட 30 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நெல் கொள்முதல் மையங்கள் குறித்த குறைகளைக் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 599 3540 மூலம் தெரிவிக்கலாம் என்றாா்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் எஸ்.பிரபாகா், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.