தமிழ்நாடு

அன்னையர் தினத்தில் 'இட்லி பாட்டி'க்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

DIN

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு ஆனந்த் மஹிந்திரா வீடு காட்டிக்கொடுத்து அதற்கான சாவியை நேற்று அன்னையர் தினத்தில் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதாகும் கமலாத்தாள் பாட்டி, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கிறார்.

உதவிக்கு யாருமின்றி தனி ஆளாகவே 30 ஆண்டுகளாக இந்த இட்லிக் கடையை நடத்தி வருகிறார். இட்லி, சட்னி, சாம்பார் ஆகிவற்றையும் அவரே தயாரித்து தருகிறார்.

ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்துள்ளார். சமீபத்தில்தான் விலையைகூட்டி இருக்கிறார்.

சமைப்பதற்கு கேஸ் அடுப்பு இல்லை; மாவு அரைக்க கிரைண்டரோ, சட்னி அரைப்பதற்கு மிக்சியோ இல்லை. பழங்கால முறைப்படி விறகு அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான்.

அதிகாலையிலே எழுந்து தனி ஒரு ஆளாக அனைத்தையும் செய்கிறார். இட்லி மிகவும் சுவையாக இருப்பதால் சுற்றுவட்டாரங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். 

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டி குறித்து அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை வழங்கினார்.

இதையடுத்து, பாரத் கேஸ் நிறுவனம் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச்.பி. கேஸ் நிறுவனம் மாதம் ஒரு சிலிண்டரையும் வழங்கி வருகின்றது.

அடுத்ததாக, இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவரும் ஆனந்த் மஹிந்திராவிடம் பாட்டியின் கனவு குறித்து சொல்லி,  ஆனந்த் மஹிந்திராவும் அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

முதல்கட்டமாக , மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்ச ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து,  ஆவணத்தை அவரிடம் வழங்கி உள்ளது.

இதே போல அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி , 2.5 லட்ச ரூபாய் செலவில் 1.75 சென்ட் இடத்தை இட்லி அம்மாவின் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

மொத்தம் 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கியது. கடந்த 5 ஆம் தேதி வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் நேற்று வீட்டிற்கான சாவியை வழங்கினார்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், அன்னையர் தினத்தில் பாட்டிக்கு வீடு வழங்கிய செய்தியை நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

அன்னையர் தினத்தன்று இட்லி அம்மாவுக்கு பரிசளிக்கும் வகையில் சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்த அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா,   வளர்ப்பு, அக்கறை, தன்னலமற்றவர் என அவர் ஒரு தாயின் நற்பண்புகளின் உருவகமாக இருக்கும் இட்லி அம்மாவையும், அவருடைய பணியையும் ஆதரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்றும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT