சென்னையில் குளுமையான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அதீத குளிர் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் இருப்பது சென்னையா? இல்லை உதகையாக என்று கேட்கும் அளவிற்கு குளிர்ந்த வானிலை நிலவி வருகின்றது. குளிரால் மக்கள் வெளியே வரமுடியாமல் போர்வைக்குள் ஒளிந்துகிடக்கின்றனர்.
குறிப்பாக மாலை நேரத்தில் நிலவும் அதிகமான குளிரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஜெர்கின் அணியாமல் சென்றுவிட்டால், அவ்வளவுதான் நடங்கிபோய் தான் வரவேண்டும்.
அதேபோன்று, பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் குளிரில் நடங்கிபோயுள்ளனர். சீருடையோடு, கம்பளியையும் சேர்த்து அணிந்து செல்கின்றனர்.
கடந்த அக்டோபர் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சிவகாசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை சற்று அதிகமாகவே இந்தாண்டு பெய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெய்த மழையை விட, இந்தாண்டு இயல்பை விட 6 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால், தமிழகத்தில் ஓரிரு நாள்களாக ஊசியைப் போன்று சாரல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. பலத்த மழை பெய்துவிட்டாலும், குளிர் ஓரளவு தணிந்துவிடும். ஆனால், சாரல் மழையோ, குளிரை மேலும் அதிகப்படுத்திவிடும்.
இந்நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மழை அதன் திசையை மாற்றிவிட்டது என்று சொல்லாம். வானிலையைப் பார்த்தல், குறைந்தது 100 மி.லி மழையாவது பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நம்மை பெரும் பீதியில் ஆழ்த்தாமல் சாரல் மழையோடு நின்றுவிட்டது. பெருமழை ஏமாற்றம் ஒன்றும் நமக்கு புதிதல்ல.
வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கும் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம் சட்டென்று மாறும் வானிலை, நமக்கு மேலும் கனமழையைக் கொடுக்குமா என்று!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.