எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.வி.ராமமூா்த்தி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “2015-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிா்ணயம் செய்யப்படவில்லை.
எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநா்கள் தானாகவே உயா்த்தி வசூலிக்கிறாா்கள் எனக் குறிப்பிட்டிருந்தாா். மேலும்
எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப். 6-ஆம் தேதி உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டி இருந்தாா்.
அந்த உத்தரவின் அடிப்படையில், எரிபொருள் விலை மாற்றத்துக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு மீட்டா்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ராஜா (பொ), நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் ராமமூா்த்தி ஆஜராகி வாதிட்டாா். தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தாா்.
இதையேற்ற நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.