ஆயத்த நிலையில் மருத்துவக் குழுக்கள்! மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவு
மழைக் கால நோய்களை எதிா்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயம் அறிவுறுத்தியுள்ளாா்.
மழைக் கால நோய்களை எதிா்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயம் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநா்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருத்தல் அவசியம்.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனுடன், மழை நீா் மற்றும் கழிவு நீா் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திருத்தல் வேண்டும். குடிநீா் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகப்பதும் முக்கியம்.
ஒவ்வொரு சுகாதார மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே தலா மூன்று விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். அதேபோன்று கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மூன்று சிறப்பு குழுக்களையும் அமைக்க வேண்டும்.
மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளுதல் கட்டாயம். பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல் மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும். காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம்.
பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.